லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்
அரியலூரில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
லாரிகள் நேருக்கு நேர் மோதல்
பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தை சேர்ந்தவர் மகிமை. இவருடைய மகன் அலெக்ஸ் (வயது 30), லாரி டிரைவர். இவர் தனது லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூருக்கு சென்றார். பின்னர் ஜல்லிக்கற்களை இறக்கி விட்டு மீண்டும் பெரம்பலூர் நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
அரியலூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது அலெக்ஸ் ஓட்டி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 லாரிகளும் அப்பளம் போல் நொறுங்கின.
2 டிரைவர்கள் படுகாயம்
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அரியலூர் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தினர். அப்போது ஒரு டிரைவர் லாரியின் இருக்கையில் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்ஸ், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஏழுமலை (40) ஆகியோரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.