லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி


லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிரைவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

சூலூர்

சூலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிரைவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாரிகள் மோதல்

ஈரோட்டில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளா நோக்கி சென்றது. அந்த லாரியை ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார்.

அந்த லாரி கோவை அருகே உள்ள எல் அண்டு டி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்று கொண்டு இருந்தது. அங்குள்ள வெள்ளலூர் பிரிவு அருகே வந்தபோது, எதிரே கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை ஏற்றிச்சென்ற லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

முட்டைகள் உடைந்தன

இதில் முட்டை லாரி அப்பளம்போல நொறுங்கியது. அத்துடன் அதில் ஏற்றப்பட்ட முட்டைகள் அனைத்தும் உடைந்து சாலையில் கூழாக ஓடியது. மேலும் லாரியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த லாரிகளுக்குள் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் பலி

இதில் செல்லும் வழியிலேயே முட்டை ஏற்றிய லாரியை ஓட்டி வந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த கிளீனர் துரைசாமி, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த நித்திஸ், கிளீனர் தீபக் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்து காரணமாக சாலையில் டீசல் டேங்க் உடைந்து சிந்தியதுடன், ஏராளமான முட்டைகள் உடைந்து கிடந்ததால், அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்புத்துறையினர் சுத்தம் செய்தனர். அத்துடன் இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அதனை போலீசார் ஒழுங்கு செய்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், முன்னால் சென்ற வாகனத்தை கண்டெய்னர் லாரி முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்தது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story