அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல்


அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கனிம வளம் கடத்தல்

குமரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அந்த லாரிகளில் விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லாரிகள் பறிமுதல்

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளையை அடுத்த களியக்காவிளை பி.பி.எம். ஜங்ஷன் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 5 லாரிகள் வந்தன. அவற்றை நிறுத்தி சோதனை செய்தபோது, கனிம வளங்கள் அதிக பாரம் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் சோதனையை அறிந்த லாரி டிைரவர்கள் படந்தாலுமூடு மற்றும் களியக்காவிளை பகுதிகளில் லாரிகளை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி சென்றனர். அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story