கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி


கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி
x

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மக்கள் முயற்சி செய்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

தஞ்சாவூர்


தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மக்கள் முயற்சி செய்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

மகளிர் கல்லூரி

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் பூக்காரத்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தக்கூடிய செங்கமல நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டுமானப்பணி நடைபெற்றது. இதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தநிலையில் பூக்காரத்தெரு மக்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அந்த கோர்ட்டு உத்தரவு நகலுடன் கோவில் கட்டுமான பணியை மேற்கொள்வதற்காக நேற்று சிலர் வந்தனர். இதை அறிந்த கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் சிலர் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரும் கோர்ட்டு உத்தரவு நகலை காண்பித்து தங்கள் தரப்பில் தான் நியாயம் இருப்பதாக தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்த தகவலை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பூக்காரத்தெரு மக்கள் தரப்பில் கவுன்சிலரும், வக்கீலுமான கண்ணுக்கினியாள், போலீசாரிடம் பேசினார். அப்போது கோர்ட்டு உத்தரவு நகலை காண்பித்து, கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றார். ஆனால் கல்லூரி வளாகத்திற்குள் தெய்வவழிபாடு நடக்கக்கூடாது என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இப்படி இருதப்பினரும் மாறி, மாறி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்து கொண்டே இருந்தனர். இதையடுத்து மாணவர் சேர்க்கை நடைபெறும் வரை பணிகளை செய்யக்கூடாது என கூறியதுடன் கல்லூரி, கோவில் நிலம் எவை என்பதை கண்டறிய நிலஅளவீடு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இருதரப்பினரும் ஆவணங்களை ஒப்படைக்கும்படி போலீசார் கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.


Next Story