ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயற்சி
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
சேலம்:
சேலம் தென் அழகாபுரம் பகுதியில் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கிய நிலத்தை கடந்த 20 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்க வலியுறுத்தியும் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடையை மீறி நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் உடனடியாக அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தென் அழகாபுரத்தில் ரேஷன் கடை வருவதை சிலர் தடுப்பதற்காக அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.