ஓடும் ரெயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்து கீழே தள்ளி கொல்ல முயற்சி
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி கொல்ல முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி கொல்ல முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
கத்தி முனையில் செல்போன் பறிப்பு
சென்னையை சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக அவர் திருமண அழைப்பிதழை சத்துவாச்சாரியில் உள்ள உறவினருக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து மின்சார ரெயில் மூலம் நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.
மாலையில் ரெயில் காட்பாடி ெரயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் பெட்டியில் அந்க பெண் தனியாக இருந்தார். அதே பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் அந்த பெண்ணிடம் செல்போனை கொடு பேசி விட்டு தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், நீ யார் என்று எனக்கு தெரியாது. உன்னிடம் செல்போனை கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.
அந்த வாலிபர் இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த பெண் செல்போனை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பதித்துள்ளார்.
கீழே தள்ளி கொல்ல முயற்சி
அந்தப் பெண் கூச்சல் போடவே அவர் அணிந்திருந்த துப்பட்டாவை பிடித்து இழுத்து அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளினார். அதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு சேனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கைது
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப் பதிவு செய்து ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மாநகராட்சி பகுதியில இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ரெயிலில் பயணம் செய்த அந்த வாலிபர் குடியாத்தம் கீழ்ஆலத்தூர் சின்னநாகல் கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 24) என தெரியவந்தது. இவர் காட்பாடியில் நடைபெறும் அக்னிபாத் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சான்றிதழ் சரி பார்த்து விட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ஹேமராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.