மதுரையில் பச்சிளம் குழந்தையை விற்க முயற்சியா?
பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த குழந்தையை மீட்ட போலீசார், இதுதொடர்பாக 4 பெண்களை கைது செய்தனர்.
பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த குழந்தையை மீட்ட போலீசார், இதுதொடர்பாக 4 பெண்களை கைது செய்தனர்.
வீட்டில் பிறந்த குழந்தை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் ஓராண்டுக்கு முன் இறந்தார். ஒரு மகள் உள்ள நிலையில் அந்த பெண் திருப்பூருக்கு வேலைக்கு சென்றபோது அங்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு கர்ப்பமுற்றார். 7 மாதத்திற்கு பிறகே அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
எனவே மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அங்கு, தான் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முடிவு செய்தார். அதற்காக அன்னமார்பட்டியில், முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மாலதியிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
விற்க முயற்சி
அந்த குழந்தை தனக்கு வேண்டாம் என்று கூறியதால் மாலதி தானே வளர்ப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்று 2 நாட்களாக பராமரித்து வந்தார்.
இதற்கிடையில் உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (வயது 60) என்பவருக்கு குழந்தை குறித்து தெரியவந்தது. உடனே அவர் மாலதியிடம் தனக்கு பெண் குழந்தை தேவைப்படுகிறது என்று கூறி பெற்று கொண்டார்.
பின்னா் அவர் குழந்தையுடன் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சந்தேகப்பட்டு, அந்த மூதாட்டியை அழைத்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் மாலதியிடமிருந்து குழந்தையை பாண்டியம்மாள் பெற்று அவரது சகோதரி சின்னபாண்டியம்மாளுக்கு கொடுக்க வந்த போதுதான் போலீசில் சிக்கியுள்ளார். பணத்திற்காக குழந்தை விற்கப்பட்டதா? அல்லது வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
4 பெண்கள் கைது
இதற்கிடையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி (35), பாண்டியம்மாள் (60), அவருக்கு உடந்தையாக இருந்த மகள் அழகுபாண்டியம்மாள் (40), சின்னபாண்டியம்மாள் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் அந்த குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசுநலப்பராமரிப்பு பிரிவில் சேர்த்தனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.