சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
ஜோலார்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணான்டபட்டி ஆலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி கீதா (வயது 28). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தீபா (30) என்பவரும் அங்குள்ள ஒரு மளிகைக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
காந்திநகர் பகுதி சாலை வளைவில் சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேரில் ஒருவன், திடீரென கீதாஅணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றான். அவன், பிடித்து இழுத்தபோது சங்கிலி கீதாவின் ஜாக்கெட்டுக்குள் சிக்கி கொண்டு அதிர்ஷ்டவசமாக தப்பியது.
சங்கிலியை பறிக்க முயன்றவரின் கையை பிடித்துக் கொண்ட கீதா திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டு அலறினார். ஆனால், மர்மநபர் கீதாவின் பிடியில் இருந்து விடுப்பட்டு சங்கிலி பறிக்கும் முயற்சியை ைகவிட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து கீதா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்கள் யார்? என்பது குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து தேடி வருகின்றனர்.