கடலூர் போலீஸ்காரர்கள் பொய் சொல்லிவிட்டார்கள்: 'நம்மை துரத்திய போலீசாரே ராஜமரியாதையுடன் உட்கார வைப்பார்கள்' யூடியூபர் டி.டி.எப். வாசன் சர்ச்சை பேச்சு


கடலூர் போலீஸ்காரர்கள் பொய் சொல்லிவிட்டார்கள்:    நம்மை துரத்திய போலீசாரே ராஜமரியாதையுடன் உட்கார வைப்பார்கள்    யூடியூபர் டி.டி.எப். வாசன் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் போலீஸ்காரர்கள் பொய் சொல்லிவிட்டார்கள் என்றும், நம்மை துரத்திய போலீசாரே ராஜமரியாதையுடன் உட்கார வைப்பார்கள் என்று யூடியூபர் டி.டி.எப். வாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

கடலூர்


கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). திரைப்பட இயக்குனர். புதுப்பாளையத்தில் இவரது திரைப்பட அலுவலக திறப்பு விழாவில், பங்கேற்க பிரபல பைக் ரேசர் யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த 14-ந்தேதி வருகை தந்தார்.

தனது வருகை பற்றி ஏற்கனவே, இன்ஸ்டாகிராம் பதிவில், கடலூரில் அனைவரையும் சந்திப்பதாகவும், அருகில் இருப்பவர்கள் வாருங்கள் 'பன் செய்து அல்ட்ராசிட்டி' பண்ணலாம் என்று அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

விரட்டியடித்த போலீஸ்

அவர் பேசியபடியே அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். நிலைமை மோசமானதால், அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதற்கிடையே, அனுமதி இன்றி விளம்பர பதாகைகள் வைத்ததாக திரைப்பட இயக்குனர் செந்தில், அவரது மேலாளரான எஸ்.என்.சாவடியை சேர்ந்த விக்னேஷ்(34) ஆகியோரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக டி.டி.எப்.வாசன், செந்தில் உள்ளிட்ட 300 போ் மீது புதுநகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

துணிக்கடை கட்டப்பை போன்று வழக்கு

இந்த சூழ்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நேற்று யூடியூபர் டி.டி.எப். வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், நம் மீது வழக்குப்போடுவதால், சங்கடமாக இருக்கிறதா என்றால் இ்ல்லை. துணிக்கடைக்கு சென்று கட்டப்பை வாங்குவது போன்று, வழக்கை இலவசமாக வாங்கி வருகிறோம். அதனால் வருத்தம் இல்லை.

ஆனால், பசங்க மீது கை வைத்துவிட்டார்கள். அதுதான் கஷ்டமா இருக்கு. என் மீது கை வைத்தால் கூட வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். டி.என்.31-ஐ (கடலூர் வாகன பதிவு எண்) என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க மாட்டேன். அவர்களை வாழ்க்கை முழுவதும் உடம்பில் தாங்கி கொண்டு இருக்க போகிறேன்.

பொய்சொல்லி விட்டார்கள்

இதுபற்றி எதிர்காலத்தில் தெரிவிக்கிறேன். போலீஸ் அண்ணன்களை அதிகமாக பெருமையாக பேசி இருந்தேன். ஆனால், அன்று அவர்கள் பசங்க மீது கை வைத்து விட்டார்கள். போலீசாரிடம் கேட்ட போது பசங்க கல்லை தூக்கி அடித்ததால் தான், நாங்கள் திருப்பி அடித்தோம் என்று பொய் சொல்லிவிட்டார்கள். ஆனால், பசங்க கல்லை தூக்கி அடிக்கவில்லை.

ஒருவனை போட்டு குத்திக்கொண்டு இருந்தால், ஒரு கட்டத்துக்குமேல் வெறியாகிவிடுவான். ஆலமரமாக வளர்வதை விட அசூரமரமாக வளர்ந்துவிடுவான். டி.டி.எப்-ஐ 'பிராண்டாக' மாற்றுவதற்கான அனைத்து வேலையையும் செய்து வருகிறேன்.

ராஜமரியாதையுடன் உட்கார வைப்பார்கள்

போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களின் போன்பே மூலமாக பணத்தை அனுப்பி விட்டேன். சும்மா வாய்வார்த்தையாக சொல்கிற ஆள் கிடையாது. எது சொன்னாலும் செய்துவிடுவோம். நம்மை துரத்திய போலீசாரே நம்மை ராஜமரியாதையுடன் உட் கார வைப்பார்கள், உட்கார வைப்பேன் என்று பேசி உள்ளார். போலீஸ் குறித்து இவ்வாறு அவர் பேசி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story