காசநோய் விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
காசநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளச்சாமி வரவேற்று பேசினார். மேலும் காச நோயாளிகள் பயன்படும் வகையில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. காசநோய் இல்லாத தமிழகம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. காசநோயின் ஆரம்ப அறிகுறிகளான இரு வாரங்களுக்கு மேல் இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், இருமும் போது சளியில் ரத்தம் வருதல் ஆகியன இருந்தால் உடனடியாக காச நோய் மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ- மாணவிகள் கைகளில் ஏந்தி பேரணியில் சென்றனர். தென்காசி மாஸ் கம்யூனிட்டி கல்லூரி, செயின்ட் மேரிஸ் நர்சரி கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாவட்ட காசநோய் மையத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் தென்காசி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன், தினேஷ், மாஸ் கம்யூனிட்டி கல்லூரி தாளாளர் முகமது அன்சாரி, இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட பொருளாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.