காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் சிறப்பு முகாம்


காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் சிறப்பு முகாம்
x

காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

காசநோய் ஒழிப்பு

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் கண்டுபிடிப்பதற்காக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் துரித காசநோய் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி காசநோய் கண்டுபிடிப்பு முகாமை தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

காசநோய் இல்லாத தமிழகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கினை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோய் அறிகுறிகள் உள்ள பொதுமக்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 34 நபர்களுக்கு காச நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் காச நோய்க்காக சிகிச்சை எடுக்கும் காலங்களுக்கு ஊட்டச்சத்திற்காக அரசு இலவசமாக வழங்கும் உதவித்தொகையான ரூ.500 மாதம் தோறும் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இதுவரை 1,219 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 531 நபர்களுக்கு உள்ளுறை காசநோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் காசநோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காசநோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி, மாவட்ட நல கல்வியாளர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story