தூத்துக்குடியில் துடிசியா தொழில் கண்காட்சி
தூத்துக்குடியில் துடிசியா தொழில் கண்காட்சியை வெள்ளிக்கிழமை அமைச்சர் அன்பரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் துடிசியா தொழில் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு (துடிசியா) சார்பில் தொழில் கண்காட்சி தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கண்காட்சிக்கு துடிசியா தலைவர் கே.நேருபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சி தலைவர் ஜே.அருள்சகாயராஜ் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
ஒதுக்கீடு
அப்போது, தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 347 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் புதிதாக 5 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ரூ.3 கோடியே 81 லட்சம் மானியத்துடன் ரூ.15 கோடியே 25 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 278 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். ஆகாய தாமரை தண்டுநாரில் இருந்து கைவினை பொருட்கள் தயாரிக்க ரூ.2 கோடி திட்ட மதிப்பில் குறுங்குழுமம் அமைக்கவும், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.7 கோடி மதிப்பில் குறுங்குழுமம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 10 புதிய ஏற்றுமதி மையங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தொழில் வணிகத்துறை ஆணையர் சிஜி தாமஸ், சிட்கோ மேலாண்மை இயக்குனர் மதுமதி, ஸ்டார்ட் அப் இயக்குனர் சிவராஜா ராமநாதன், தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துடிசியா செயலாளர் ராஜ்செல்வின் நன்றி கூறினார்.