திண்டுக்கல் நேருஜிநகரில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் சுரங்கப்பாதை பணி பாதிப்பு


திண்டுக்கல் நேருஜிநகரில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் சுரங்கப்பாதை பணி பாதிப்பு
x
தினத்தந்தி 17 May 2023 2:15 AM IST (Updated: 17 May 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நேருஜிநகரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், சுரங்கப்பாதை பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நேருஜிநகரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், சுரங்கப்பாதை பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

ரெயில்வே சுரங்கப்பாதை

திண்டுக்கல் நேருஜிநகர் ரவுண்டானா அருகே திருச்சி சாலை, கரூர் சாலை ஆகிய 2 சாலைகளிலும் ரெயில்வே கேட் இருந்தது. அதில் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு விட்டது. அதையடுத்து கரூர் சாலையில் ரூ.17 கோடி செலவில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதில் தொடக்கத்தில் ரெயில் தண்டவாளத்தின் இருபக்கங்களிலும் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. அப்போது மழையால் தண்ணீர் தேங்கியதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. ஒருவழியாக தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. அதையடுத்து தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது.

குளமாக மாறியது

இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் நிரந்தர தண்டவாளம் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ரெயில்வே சுரங்கப்பாதைக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடைமழையால், சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

இதனால் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கட்டுமான பணிகள் நடக்கின்றன. அதேநேரம் கோடைமழைக்கே சுரங்கப்பாதை குளமாக மாறியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story