தர்மபுரி, அரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சள் ஏலம்
தர்மபுரி:
தர்மபுரி, அரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம் நடக்கிறது.
மஞ்சள் ஏலம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த மஞ்சளை தரகு, கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய தர்மபுரி மற்றும் அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம் நடக்கிறது.
மறைமுக ஏலம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தர்மபுரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் நடக்கிறது.
வங்கி கணக்கு
இந்த ஏலத்தில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த மஞ்சளை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் விளைவிக்கும் மஞ்சளை நிழலில் நன்கு உலர்த்தியும், சருகு, தூசி இல்லாமல் எடுத்து வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற வேண்டும். மஞ்சளுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே சாகுபடி செய்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.