ஆரோக்கியத்திற்கு மஞ்சள்; சுற்றுச்சூழலுக்கு மஞ்சள் பை -மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் அறிவுரை


ஆரோக்கியத்திற்கு மஞ்சள்; சுற்றுச்சூழலுக்கு மஞ்சள் பை -மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் அறிவுரை
x

மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ, அதைப்போல மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் கூறினார்.

மதுரை


மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ, அதைப்போல மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் கூறினார்.

மஞ்சள் பை

ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மதுரை ஐகோர்ட்டை அறிவித்து, மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கான எந்திரங்களை மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பிளாஸ்டிக்கை தடை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மீண்டும் மஞ்சள்பை பயன்பாட்டை தொடங்கி உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துகின்றன.

இந்த நேரத்தில் "மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

அதாவது, அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ, அதைப்போல மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் பை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிளாஸ்டிக் பயன்பாடு

வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்பிரியா சாகு, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீங்கு குறித்து எடுத்துரைத்தார்.

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன், பவானி சுப்பராயன், தாரணி, புகழேந்தி, விஜயகுமார், ஸ்ரீமதி, சத்தியநாராயண பிரசாத், தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியத்தலைவர் ஜெயந்தி முரளி, மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ்சேகர், மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன் மற்றும் அரசு வக்கீல்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story