மஞ்சள் விளைச்சல்-விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை ஈரோட்டில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


மஞ்சள் விளைச்சல்-விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை  ஈரோட்டில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x

முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

ஈரோடு

மஞ்சள் விளைச்சல் மற்றும் விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மஞ்சள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட்டுறவு துறை மூலம் இங்கு 'மங்களம்' என்ற பெயரில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி, பஜ்ஜி மாவு என 14 வகையான பொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, நேரடியாகவும், கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.

நவீன எந்திரம்

இவற்றின் மூலம் கிடைக்கும் முழு லாபமும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது. மஞ்சள் விளைச்சல் மற்றும் விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு தனியார் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தாலும் இது அரசு நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்யவும், இங்கு தயாரிக்கும் மசாலா பொடிகளின் விற்பனையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இங்குள்ள எந்திரங்களை நவீனமயமாக்கவும், கூடுதலாக விற்பனைக்கான வாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சில ரேஷன் கடைகளில் சமீப காலமாக கோதுமை கிடைக்கவில்லை என புகார்கள் வந்தது. நேரடியாக ஆய்வு செய்தபோது, அதை உறுதிப்படுத்தினோம். அந்தந்த மாவட்டங்களின் கோதுமை இருப்பு இருந்தும், கடைகளுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்தோம்.

தனிப்படை

ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதை தடுக்க டி.ஜி.பி. தலைமையில், 4 போலீஸ் சூப்பிரண்டுகளை கொண்ட தனிப்படை செயல்படுகிறது. கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்த பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பொதுமக்களும் அதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களுக்குத் தேவையான அளவில் மட்டுமே பொருள்களை வாங்கி கடத்தலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அப்போது அவருடன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் ராஜ்குமார், ரேணுகா, துணை பதிவாளர்கள் கந்தராஜா, நர்மதா, விற்பனை சங்க துணைப்பதிவாளர் கணேசன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் கந்தசாமி, விற்பனைக்குழு கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story