தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுதவற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி விளக்கி கூறினார்.
வேளாண் அதிகாரிகள் ஆய்வு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 120 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளையும், விளாத்திகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் சென்னை மத்திய அரசு திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மீனாகுமாரி ஆய்வு செய்தார்.
கலந்துரையாடல்
அவர், கயத்தாறு வட்டாரத்தில் திருமலாபுரம், வடக்கு இலந்தைகுளம், கோவில்பட்டி வட்டாரத்தில் கடலையூர், சின்னமலை குன்று, சு. வெங்கடேசபுரம், விளாத்திகுளம் வட்டாரத்தில் ராமனூத்து, நீராவிபுதுப்பட்டி, புதூர் வட்டாரத்தில் கீழக்கரந்தை, முத்துலாபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் நடப்பாண்டு தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்து, தரிசுநில தொகுப்புகளை சாகுபடிக்கு கொண்டுவருதல், மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் வழிமுறைகள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடினார். ஆழ்துளைக்கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் வசதி ஏற்படுத்தி மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்யவும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். கோவில்பட்டி வட்டாரம் தலைக்காட்டுபுரம் பஞ்சாயத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) சொ.பழனிவேலாயுதம், வோளண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) க.ஜெயசெல்வின் இன்பராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் சகாயமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.