தூத்துக்குடி: டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தாய், மகன் உட்பட 3 பேர் பலி


தூத்துக்குடி: டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தாய், மகன் உட்பட 3 பேர் பலி
x

ஓட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள பெத்துரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி(வயது65). இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்.

இவரது மனைவி சங்கரேஸ்வரி(60), இவர்களுக்கு கனகதர்மராஜ் (40), சங்கர்(38), ராமர் (35) என்ற மூன்று மகன்களும் பிரபா என்ற மகளும் உள்ளனர். மகள் பிரபாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது பிரபா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனால் கிராமம் முறைப்படி கட்டுசோறு கொண்டு செல்வதற்காக இன்று அதிகாலை பழனிச்சாமி அவரது மனைவி சங்கரேஸ்வரி, மகன்கள் கனகதர்மராஜ், சங்கர், ராமர், கனகதர்மராஜ் மனைவி முத்துலட்சுமி(35), இவரது மகள் ஓவியஸ்ரீ(10), மகன் நிவித்குரு(7), சங்கர் மகன்கள் தீமஹி(10), பீமன்(7), மற்றும் அதே ஊரை சேர்ந்த ஆசிரியை மருதாயி(55) ஆகியோருடன் காரில் புறப்பட்டு வந்தனர்.

காரை அவரது மகன் சங்கர் ஓட்டி வந்தார். அப்போது கார் ஓட்டப்பிடாரம் அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகே கார் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் டயர் பிடித்தது. இதில் கார் சாலையோரமாக இருந்த வேப்பமரம் மீது மோதியது பள்ளத்தில் கவிழ்தது.

இதில் சம்பவ இடத்திலேயே சங்கரேஸ்வரி, ஆசிரியை மருதாயி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பயணம் செய்த எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் இறந்த சங்கரேஸ்வரி, ஆசிரியை மருதாயி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story