தூத்துக்குடி 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்காக திறப்பு


தூத்துக்குடி 3-வது கேட்  ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்காக திறப்பு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் வியாழக்கிழமை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் திறக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேம்பாலம்

தூத்துக்குடி நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரெயில் தண்டவாளம் அமைந்து உள்ளது. இதனால் தண்டவாளத்தில் இருபுறமும் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 4 ரெயில்வே கேட்டுகள் அமைந்து உள்ளன. இதில் 3-வது ரெயில்வேட் அருகே புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம் அமைந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது ரெயில்வே கேட்டில் கடந்த 2008-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் மொத்தம் 12 அடுக்குகள் உள்ளன. ஓவ்வொரு அடுக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரெயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்து இருந்தது.

போக்குவரத்துக்கு திறப்பு

இதனை தொடர்ந்து கடந்த 3-ந் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் 2-ம் கேட், 4-ம் கேட் வழியாக சென்றன. அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த பணிகள் நேற்று முன்தினம் முடிக்கப்பட்டது. இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாலம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இதனால் மாற்றுப்பாதைகளில் சென்று வந்த அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் பாலத்தில் ஏறி சென்றன.

வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும் போது, தூத்துக்குடி நகரின் முக்கிய பாலாமாக 3-வது கேட் ரெயில்வே மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலம் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்று வந்தோம். பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் போக்குவரத்து மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவித்தபடி 10 நாட்களில் பாலம் சீரமைப்பு பணிகளை முடித்து உள்ளனர். தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.


Next Story