தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம்:தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய தொடர் பிரசாரம், இயக்கங்கள் தொடர்பாக தூத்துக்குடியில் 11 மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில மூத்த தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட நிர்வாகிகள் மா.முருகன், எஸ்.மாரியப்பன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்டச் செயலாளர் சுசீ.ரவீந்திரன், முருகன், ராமசாமி, ஐ.என்.டி.யு.சி மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், துறைமுக ஐ.என்.டி.யு.சி தலைவர் சந்திரசேகர், எச்.எம்.எஸ் மாவட்டத் தலைவர் ராஜகுமார், மாவட்டச் செயலாளர் துறைமுகம் சத்யா, பொருளாளர் காந்தி சேகர், ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டத் தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் த.சிவராமன், பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானம்
கூட்டத்தில், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளால் அதிகரித்து வரும் வேலையின்மை, ஆலை மூடல், வேலையிழப்பு, தொழில்-விவசாய நெருக்கடி, விலை உயர்வு, சமூக பாதுகாப்பு பறிப்பு உள்ளடக்கிய 14 அம்ச கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, ஆகஸ்டு 9-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொழிலாளர் பெருந்திரள் அமர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற்பது, ஜூலை 28,29 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் வாகன பிரச்சாரம் மேற்கொள்வது, ஜூலை 25-ந் தேதி தூத்துக்குடியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
துண்டுபிரசுரம்
இது குறித்து சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் கூறும் போது, கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் வேலையின்மை மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது மேலும் போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு தொழிலாளர் விரோத நடவடிக்கை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன
இதன் ஒரு பகுதியாக வருகிற 25-ந் தேதி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்களை பொதுமக்களை ஒன்றிணைக்கும் கூட்டம் நடத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கு எதிராக 50 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று கூறினார்.