தூத்துக்குடி பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
தூத்துக்குடி பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுயதொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையமும் இணைந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் போதிய கம்ப்யூட்டர் அறிவை பெறவும், அதன் மென்பொருட்கள் பயன்படுத்தும் திறன்களில் வளர்ச்சி பெறவும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் பயிற்சி முடித்து உள்ளனர். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏ.வி.எம். அசோஸியேட்ஸ் நிர்வாகி சீனிவாசன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நெல்லை முருகன், பள்ளி முதுகலை ஆசிரியர் பாலசுந்தரகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.