தூத்துக்குடி தெற்கு மாவட்டபா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
புதிய அலுவலகம்
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி எதிரே புதிதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா. ஜனதா கட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எம்.பால்ராஜ், பி.ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், மாநில வணிகர்பிரிவு தலைவர் ஏ.என்.ராஜகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர்கள் சசிகலாபுஷ்பா, ஆர்.சி.பால்கனகராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சி அலுவலகத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் கட்சி அலுவலகத்தை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ திறந்து வைத்தார். கட்சி அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்கள் குத்து விளக்கு ஏற்றினர். மாவட்ட தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள இருக்கையில் தலைவர் சித்ராங்கதன் அமர வைக்கப்பட்டார்.
நம்பிக்கை
விழாவில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பேசும் போது, பா.ஜனதா கட்சிக்கு மாவட்ட அளவிலும் கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியின் மனதில் இருந்ததால் இந்த அலுவலகத்தை கட்டித் தந்து உள்ளார்கள். பா.ஜனதா கட்சி தற்போது வளர்ந்து இருக்கிறது. வளரும் என்ற நம்பிக்கையோடு உள்ளோம். காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம். 10 ஆண்டுகாலமாக நாட்டுக்கு வழிகாட்டிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் 40 ஆண்டுகாலம் பா.ஜனதா கட்சிதான் நாட்டுக்கு வழிகாட்டும். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
விழாவில் மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா பேசும் போது, இது ஒரு குடும்ப விழா. பா.ஜனதா கட்சியில் நாங்கள் குடும்பமாக சேர்ந்து சேவை செய்வோம். ஆனால் பிற கட்சிகளில் ஒரே குடும்பம் மட்டும் சேவை செய்யும். பா.ஜனதா கட்சியில் வேறுபாடு கிடையாது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய கட்சி பா.ஜனதா. மாவட்டம் தோறும் கட்சி அலுவலகம் கொண்டு இருக்கும் கட்சி பா.ஜனதா. மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த அலுவலகத்தை பிரதமர் நமக்கு தந்து உள்ளார். நாம் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பாரதத்தின் பெருமையை உயர்த்த போராடும் பிரதமருக்காக ஒவ்வொரு தொண்டனும் புறப்பட உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு 90 சதவீதம் பூத் கமிட்டி பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. தனித்து நின்றாலும் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எஸ்.சத்தியசீலன், ஆர்.சிவமுருகன் ஆதித்தன், ராஜா, மாவட்ட பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ஜி.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தணகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் வாரியார், சுவைதர், சிவராமன், தங்கம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.