தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை கப்பல் மூலமாக கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இலங்கைக்கு நிவாரண உதவி
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து வி.டி.சி.சன் என்ற சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் என மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 3-வது கட்டமாக வி.டி.சி.சன் என்ற சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு 16 ஆயிரத்து 650 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என சுமார் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசுகையில்,
இலங்கையில் அவதிப்படக்கூடிய மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப வேண்டும் என மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருட்களை அனுப்பி வருகிறார். அந்த வகையில் சென்னையில் இருந்து முதல் கட்டமாக தமிழக முதல்-அமைச்சர் பொருட்களை அனுப்பி வைத்தார். 2-வது மற்றும் 3-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மட்டும் சுமார் 17 ஆயிரம் டன் அளவில் அரிசி, மருந்து மற்றும் பால் பவுடர் அனுப்பப்படுகிறது.
உலகில் எந்த ஒரு மக்களுக்கும் பாதிப்பு என்றால் முதலில் உதவுவது நமது தமிழ்இனம் தான் கை கொடுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை நிரூபிக்க கூடிய வகையில் தான் தமிழக முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். தந்தை பெரியார் சொன்னதை போல் மனித நேயத்தை கடைபிடிக்கக்கூடிய ஆட்சியாக திராவிட ஆட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் முதலில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்புவதாக தெரிவித்தார். தற்போது 170 கோடி ரூபாய்க்கு மேலாக பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.