தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.278 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கவிழா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.278 கோடியில் புதிய திட்டங்களை மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.278 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் நேற்று தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை துறைமுக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை, ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.91 கோடியே 23 லட்சம் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டம், துறைமுக நுழைவு வாயில் அகலப்படுத்துதல், காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டம் உள்ளிட்ட ரூ.186 கோடியே 75 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சக்திவாய்ந்த நாடு
இந்தியா சக்திவாய்ந்த நாடாகவும், சுயசார்பு நாடாகவும் வளர்ந்து வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்த துறைமுகத்தை உலகில் முக்கியமான துறைமுகமாக மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த துறைமுகம் கடந்த நிதியாண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது. இது துறைமுகத்தின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. மேக்இன் இந்தியா, ஆத்மநிர்பர் போன்ற வளர்ச்சி திட்டங்கள் மூலம் தான் மக்கள் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளிவர முடியும்.
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் இந்தியா சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு உள்ள நாடாக மாறி உள்ளது. நான் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும் மிகவும் ஆச்சரியப்பட்டு உள்ளேன். இங்குள்ள செழுமையான பண்பாடு, கலாசாரம், ராமானுஜர், திருவள்ளுவர் போன்ற சிறந்த மனிதர்களின் பெருமைகளை அறிந்து ஆச்சரியப்பட்டு உள்ளேன்.
பொருளாதார மேம்பாடு
இந்திய பொருளாதார மேம்பாட்டில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம் போன்றவற்றிலும் தமிழகம் முக்கிய இடம் பெற்று உள்ளது. இந்தியா 2047-ல் சுயசார்பு நாடாக மாற மக்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
மாசு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் செயல்பட்டு வருகிறார். இதற்காக இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் நடந்து வருகின்றன. 2070-ல் இந்தியாவில் கார்பன் வெளியீடு பூஜ்ஜியம் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கப்பல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டம், கடற்சார் மேம்பாட்டு திட்டம் மூலம் 2030-ல் துறைமுகங்களுக்கு சிறப்பான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
ஏற்றுமதியில் சாதனை
இந்தியாவில் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் கொள்ளளவில் 96 சதவீதமும், மதிப்பில் 76 சதவீதமும் வர்த்தகம் செய்து உள்ளோம். துறைமுகம் சார்ந்த தொழில்கள், நவீனமயம், துறைமுக இணைப்பு வசதிகள், கடலோர சமுதாய மேம்பாடு, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகிய 5-ம் முக்கியமானவை ஆகும். 2021-22-ம் ஆண்டு 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய பிரதமர் இலக்கு நிர்ணயித்து இருந்தார். ஆனால் அந்த ஆண்டு முடிவதற்கு 2 மாதம் முன்பே 430 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்து சாதனை படைத்து உள்ளோம். தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிகள் முடிவடையும்போது, இது நாட்டில் சிறந்த பசுமை துறைமுகமாகவும், சரக்கு கையாளும் துறைமுகமாகவும் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன் (தெற்கு), சென்னகேசவன் (வடக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர். துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா நன்றி கூறினார்.