தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்வேலை வாங்கித் தருவதாக கூறும் முகவர்களிடம் ஏமாற வேண்டாம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறும் முகவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று ஆணைய தலைவர் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறும் முகவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம், இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.
இங்கு நிரந்தர பணியாளர்கள், அதிகாரிகளை பணியில் அமர்த்தும் செயல்முறை, துறைமுக விதிமுறைகள் மற்றும் ஆள்சேர்ப்பு விதிகளைப் பின்பற்றி அரசாங்கக் கொள்கையின்படி செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் துறைமுகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் ஆகியவற்றின் மூலம் உரிய விளம்பரங்கள் செய்து வெளிப்படையான முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
ஏமாற வேண்டாம்
சமீபகாலமாக மோசடி செய்யும் சிலர் வ.உ.சி. துறைமுகத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருவதாக தெரிய வருகிறது. எனவே, வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக உறுதியளிக்கும் அத்தகைய போலி அமைப்புகள் அல்லது நபா்களிடம் பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டாம். மேலும், துறைமுகத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.