தூத்துக்குடிதுறைமுகத்தில் 1-ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தூத்துக்குடிதுறைமுகத்தில் 1-ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகதியில் நிலை கொண்டு உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

செல்ல வேண்டாம்

அதே போன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவ அமைப்புக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடனும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையும், நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இன்று முதல் 2-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

எச்சரிக்கை கூண்டு

மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் நல்ல வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

----------


Next Story