தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு விருது
தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் போது, மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த துறைகளில் அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும் மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்களின் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை மண்டல மத்திய வருவாய்புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளிக்கும் ஜானாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விருது வழங்கும் விழா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவருக்கு விருதை வழங்கினார்.