தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி இயக்குனர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.சாந்தி மலர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கீகாரம்
தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால், அங்கீகாரம் வழங்கப்படும். அப்படி குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அதன்படி, கடந்த மாதம் தமிழகத்தில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இந்த குறைகள் சரி செய்யப்படாததால் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வு
இதே போன்று நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், குறைகளை கண்டறிந்து களையவும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநகரம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஆர்.சாந்தி மலர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அவர், மருந்தகம், பிரசவ வார்டு, துணி சலவையகம், பிண அறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு அவைகளை சரி செய்ய அறிவுறுத்தினார்.
மருத்துவக்கல்லூரியில்...
ஆஸ்பத்திரி வளாகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 2 பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை கேட்டறிந்தார். மாலையில் மருத்துவக் கல்லூரிக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் மற்றும் அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். மேலும், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.