தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
தூத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று குழந்தைளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தது. இதில் குழந்தைகளுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அ எழுத கற்றுக்கொடுத்தனர்.
விஜயதசமி
விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று கற்றலைத் தொடங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழி, நாட்டுப்புற கலைகள் போன்றவை கற்பிக்கப்படுகிறது. அதுபோல் இந்த நாளில் குழந்தைகள் கல்வி கற்றுக் கொள்ள தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பதும் ஐதீகம்.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
எனவே விஜயதசமி நாளான நேற்று தூத்துக்குடியில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சரஸ்வதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள்குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் அகர வரிசையின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகளின் கையைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் அகர எழுத்துக்களை எழுதினர். இதில் காலை முதல் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
பள்ளிகளில்...
மேலும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளிலும் நேற்று காலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தைகளுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சேர்க்கை மற்றும் அ எழுத கற்றுக் கொடுத்து மகிழ்ந்தனர்.