தீவிரவாதிகள் போல் படகில் வந்த 12 பேர் பிடிபட்டனர்


தீவிரவாதிகள் போல் படகில் வந்த 12 பேர் பிடிபட்டனர்
x

‘சாகா் கவாச்’ என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அதன்படி கடலூர் துறைமுகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் போல் வந்த 12 பேர் பிடிபட்டனர்.

கடலூர்

கடலூர்:

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் 'சாகா் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தீவிரவாதிகள் போல் வேடமணிந்து கடல்வழியாகவோ? அல்லது சாலை வழியாகவோ? ஊடுருவி வரும் போலீசாரை கடற்கரையோரம் பாதுகாப்பில் இருக்கும் போலீசார் பிடிக்க வேண்டும். இதுவே 'சாகா் கவாச்' என்று அழைக்கப்படுகிறது.

தீவிரவாதிகள்

அந்த வகையில் இந்த ஆண்டு 'சாகா் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் துறைமுகத்திற்கு படகில் 6 பேர் வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் 6 பேரும் கடலூருக்குள் தீவிரவாதிகள் போல் மாறு வேடத்தில் செல்ல இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 பேர் பிடிபட்டனர்

இதேபோல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று மதியம் கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்திற்கு அருகே நடுக்கடலில் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு படகை மறித்து, அதில் வந்த 6 போிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னையில் இருந்து கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் செல்ல இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களையும் போலீசார் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து நேற்று பிடிபட்ட 12 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 'சாகா் கவாச்' இன்று (புதன்கிழமை) இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story