குப்பைத்தொட்டிக்குள் இரட்டை பெண் சிசுக்கள் வீச்சு
திண்டுக்கல்லில், குப்பைத்தொட்டிக்குள் இரட்டை பெண் சிசுக்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் உடல்களை நாய்கள் கடித்து குதறின.
குப்பைத்தொட்டியில் சிசுக்கள்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த குப்பைத்தொட்டியை சுற்றிலும் தெருநாய்கள் சூழ்ந்து நின்றன. மேலும் அந்த நாய்கள், எதையோ கடித்து குதறிக்கொண்டிருந்தன.
இதற்கிடையே குப்பகைளை அள்ளுவதற்காக தூய்மை பணியாளர்கள் அங்கு வந்தனர். அப்போது, குப்பை தொட்டியில் இருந்து 2 நாய்கள் எதையோ கவ்விக்கொண்டு ஓடியதையும், மேலும் சில நாய்கள் குப்பைத்தொட்டியை சுற்றி சுற்றி வந்ததையும் பார்த்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்று தூய்மை பணியாளர்கள் அந்த நாய்களை விரட்டினர். பின்னர் குப்பை தொட்டிக்குள் அவர்கள் எட்டி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், காயங்களுடன் 2 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன. அதில் ஒரு சிசுவின் தலை இல்லாமல் இருந்தது.
பொதுமக்கள் திரண்டனர்
சிசுக்களின் உடல்களை பார்த்து திடுக்கிட்ட தூய்மைப்பணியாளர்கள், இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் சிசுக்கள் குப்பைத்தொட்டியில் கிடந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சிசுக்களின் உடல்களை பார்ப்பதற்காக, அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குப்பைத்தொட்டியை சூழ்ந்து நின்ற பொதுமக்களை கலைந்து போக செய்தனர். பின்னர் குப்பைத்தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையை கவ்வி சென்ற நாய்கள்
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குப்பைத்தொட்டியில் கிடந்த இரட்டை பெண் சிசுக்கள் குறை பிரசவத்தில் பிறந்து இறந்திருப்பதும், சிசுக்களின் உடல்களை யாரோ சாக்குப்பையில் போட்டு குப்பைத்தொட்டியில் வீசிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் சிசுக்களில் ஒன்றின் தலையை நாய்கள் கடித்து கவ்வி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே குப்பைத்தொட்டியில் சிசுக்களின் உடல்களை வீசி சென்ற நபர் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கல்நெஞ்சம் படைத்த பெண் யார்?
அதில், அதிகாலையில் ஒரு பெண் சாக்குப்பையுடன் குப்பைத்தொட்டி அருகே வருவதும், பின்னர் குப்பைத்தொட்டிக்குள் அந்த சாக்குப்பையை வீசிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த காட்சிகளில் பெண்ணின் முகம் சரியாக பதிவாகவில்லை.
இருப்பினும் சிசுக்களின் உடல்களை குப்பைத்தொட்டியில் வீசிச்சென்ற அந்த கல்நெஞ்சம் கொண்ட பெண் யார்?, அவர் தான் அந்த சிசுக்களின் தாயா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.