கல்குவாரி குட்டையில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பலி
திருமயம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி இரட்டை சகோதரிகள் பரிதாபமாக இறந்தனர்.
கல்குவாரி குட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45), கூலி தொழிலாளி. இவர் தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அழகு (40). இவர்களுக்கு சமிதா (13), சஹானா (13) ஆகிய இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் ராங்கியத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்தநிலையில், அழகு தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு தாளம்பட்டி வடக்கு பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் சகோதரிகள் 2 பேரும் வீட்டின் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது 2 பேரும் கால் தவறி குட்டையில் மூழ்கினர்.
இரட்டை சகோதரிகள் பலி
இந்தநிலையில் குளிக்க சென்ற சிறுமிகள் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த அழகு தனது உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுமிகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சமிதா, சஹானா ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி இரட்டை சகோதரிகள் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.