போலீசார் தேடிய 2 பேர் கைது
திருவையாறு அருகே ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவையாறு;
திருவையாறு அருகே ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை-பணம் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மணக்கரம்பை தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 49). இவருடைய மனைவி உதயா, திருப்பழனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று உதயா பள்ளிக்கு சென்று விட்டார். இவரது கணவர் வேலை விஷயமாக திருவாலம்பொழில் சென்று விட்டார்.மாலை உதயா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவும் திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ. 70ஆயிரம், 15 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது. இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
கைது; நகை-பறிமுதல்
இந்த நிலையில் மணக்கரம்பை பைபாஸ் ரவுண்டான அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த லாசர்(47), சேலம் மாவட்டம் ஆத்தூர் கருமாந்துரையை சேர்ந்த தேவராஜ்(49) என்றும் அவா்கள் இருவரும் தென்றல் நகரில் ஆசிரியை வீட்டில் நகை-பணத்தை திருடியதும் தெரிய வந்தது.இதனையடுத்து லாசர், தேவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10½ பவுன் நகைகள், ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டுப்போன 15 பவுன் நகைகளில் 10½ பவுன் நகைகளை தவிர மீதி நகைகளை விற்று அவர்கள் பணமாக்கியதும் போலீஸ்விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட லாசர், தேவராஜ் ஆகிய இருவரும் திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.