நிலைதடுமாறி ஓடிய கார் நிழற்கூடத்தில் மோதியதில் 2 பேர் சாவு
மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் நிலை தடுமாறி நிழற்கூடத்துக்குள் புகுந்ததில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆற்காடு
மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் நிலை தடுமாறி நிழற்கூடத்துக்குள் புகுந்ததில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கார் மோதல்
ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 33). இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அண்ணாமலையார் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார் அப்போது திமிரியை அடுத்த வளையாத்தூர் கூட்ரோடு அருகே சென்றபோது மறையூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (26) என்பவர் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை ஜெயக்குமார் முந்திச்செல்ல முயன்றபோது அதன் மீது எதிர்பாராதவிதமாக அவரது கார் மோதியதில் வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டார்.
இதனை தொடர்ந்து நிலைதடுமாறிய கார் தறிகெட்டு ஓடி அங்குள்ள பஸ்நிறுத்த நிழற்கூடத்தில் பயங்கரமாக மோதியது.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த வளையாத்தூர் கூட் ரோடு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மணி (70), வளையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சாவு
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மோட்டார்சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேசனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் மணி மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். வெங்கடேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.