கஞ்சா விற்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது
திருவட்டார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கப்பெருமாள் தலைமையிலான போலீசார் வேர்க்கிளம்பி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கிேலா 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்...
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கல்லன்குழியை சேர்ந்த மெக்கானிக்கான ஆல்வின் சாமுவேல்(வயது 29) என்பதும், அதே ஊரைச் சேர்ந்த மரிய பிரான்சீஸ் மகன் வேன் டிரைவரான பிரதீஷ் (28) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆல்வின் சாமுவேலின் தந்தை அருள்தாஸ் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்ததும், நேற்று அவர் ஓய்வுபெற்றதும் தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.