கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளியை கொன்ற மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளியை கொன்ற மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

கள்ளக்காதலை கண்டித்ததால் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. மேலும் 4 உறவினர்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

கள்ளக்காதலை கண்டித்ததால் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. மேலும் 4 உறவினர்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் அவினாபேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 36). கட்டிட தொழிலாளியான இவர் சென்டரிங் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கும், சீவலப்பேரி அருகே உள்ள பொட்டல்நகரைச் சேர்ந்த சுடலை மகள் ஜானகி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஜானகிக்கும், வல்லநாட்டை சேர்ந்த சக்திவேல் (36) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை பாக்கியராஜ் கண்டித்தார். ஒரு நாள் சக்திவேலும், ஜானகியும் ஒன்றாக இருப்பதை பார்த்த பாக்கியராஜ், அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனால் சக்திவேலுக்கும், பாக்கியராஜூக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த 6-4-2016 அன்று பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவினாபேரி விலக்கு அருகே வந்தபோது சக்திவேல், அவருடைய நண்பர் வல்லநாட்டை சேர்ந்த ராஜா (32) ஆகியோர் சேர்ந்து, பாக்கியராஜை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலைக்கு ஜானகி, அவருடைய தந்தை சுடலை (56), தாய் அந்தோணியம்மாள் (52), தம்பி அந்தோணி ராஜ் (30), தாய்மாமா மாணிக்கம் (55) ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சிவந்திப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல், ராஜா, ஜானகி, மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ராஜா, ஜானகி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தனி வழக்கு

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார். இந்த வழக்குக்கு தேவையான சாட்சிகள் ஆவணங்களை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு சுந்தரவல்லி மற்றும் போலீசார் விரைந்து தாக்கல் செய்தனர்.

சக்திவேல் கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் மீதான வழக்கு தனியாக நடந்து வருகிறது.


Next Story