சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருவர் உயிரிழந்திருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அசோக் நகர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்துசென்ற மணிகண்டன் என்ற வாலிபர், திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது செல்போன் கருகிய நிலையில் இருந்ததால், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா, அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, அசாமைச் சேர்ந்த அப்பு அனிப் என்பவர், தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அப்புவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.