இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது
தவிட்டுப்பாளையம் பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் விற்பனை நிலைய காசாளர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தகராறு
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே மோதுகாடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் நவலடியான் (வயது 28). இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவலடியான் தனது குழந்தைக்கு பால் வாங்கி வருவதற்காக தவிட்டுப்பாளையம் பகுதிக்கு சென்ற போது அங்குள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் முன்பு அவரது நண்பர்கள் வசந்த், தர்மா, சுமன் ஆகியோருடன் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின்குமார் (19), லட்சுமணன், நாகேந்திரன், மணிகண்டன் என்கிற மலைக்கண்ணன், சிவசங்கர் மற்றும் பலர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.
தாக்குதல்
அதைப்பார்த்த நவலடியான் இரு தரப்பினரையும் விலக்கி விட்டார். அப்போது கவின்குமார் தரப்பினர் நவலடியானை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த நவலடியானை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நவலடியான் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
2 பேர் கைது
இதேபோல் கவின்குமார், தன்னை நவலடியான், வசந்த், சுமன் மற்றும் பலர் தாக்கியதாக கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து கவின்குமாரும் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.இருவரின் புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தனித்தனியாக வழக்குப்பதிந்து, இந்த தகராறு தொடர்பாக கவின்குமார் மற்றும் சுதர்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி ேபாலீசார் வருகின்றனர்.