சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்


சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் 13 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

திண்டிவனம் அருகே பழமுக்கல் காலனியில் உள்ள ஆயியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கூழ்வார்தல் திருவிழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது.

அப்போது அந்த வழியாக நல்லாளம் காலனியை சேர்ந்த ஆஷிக் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், தான் செல்ல வழிவிடுமாறு கூறியதால் பழமுக்கல் காலனியை சேர்ந்த இளைஞர்கள் தாக்கினர்.

இருதரப்பினர் மோதல்

இதனால் ஆத்திரமடைந்த ஆஷிக், தனது ஊருக்கு சென்று நண்பர்களை அழைத்து வந்து நியாயம் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது முற்றி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த பேனரும் கிழிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

13 பேர் காயம்

இருப்பினும் இந்த மோதலில் நல்லாளம் காலனியை சேர்ந்த பிரசாந்த்(வயது 28), அருள்(23), அன்பரசன்(24), கிஷோர்(18), சத்தியமூர்த்தி(24), தேவி(45), அலெக்ஸ்(26), பழமுக்கல் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம்(24), மணிகண்டன்(31), குணசேகரன்(60), முனுசாமி(47), முத்துராஜ்(23), மணிகண்டன்(32) ஆகிய 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது சம்பந்தமாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story