இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.20½ லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
மின்சார ஸ்கூட்டர்களை இறக்குமதி செய்து தருவதாக இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.20½ லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ெரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வாசுகி (வயது 35). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். வாசுகியிடம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், குமரன், பரத் ஆகிய 3 பேர் வந்து, தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை இறக்குமதி செய்து தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய வாசுகி, அவர்களது வங்கிக்கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சத்து 59 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் 3 பேரும் வாகனங்களை அனுப்பி வைக்கவில்லை.
இதுகுறித்து வாசுகி அவர்களிடம் கேட்டபோது, ஏதாவது ஒரு காரணம் கூறி ஏமாற்றி வந்தனர். அதேபோல் பணத்தை திருப்பி தருமாறு கேட்டும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வாசுகி, இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கண்ணன், குமரன், பரத் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.