அதிக விபத்துகள் ஏற்பட இருசக்கர வாகனங்களே காரணம்
அதிக விபத்துகள் ஏற்பட இருசக்கர வாகனங்களே காரணம் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
அதிக விபத்துகள் ஏற்பட இருசக்கர வாகனங்களே காரணம் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மீண்டு வந்துள்ளனர். தங்களது பகுதியிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு மாணவர்கள் முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.
அதிகளவில் விபத்து
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் எடுத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கல்லூரி மாணவர்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு இருசக்கர வாகனங்களே காரணம். அதிக வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். விபத்துகளை தவிர்க்க பஸ் படிகட்டுகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் போட்டிப்போட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு அவர் வழங்கினார். பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பாஸ்கரன், கோணம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) சசிகலா, ஓய்வுபெற்ற இணை இயக்குனர் (சாலை போக்குவரத்து நிறுவனம்) ஜோஸ் பேட்ரிஸ், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.