திறந்த வெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள்
திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு திறந்த வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இருசக்கர வாகன நிறுத்துமிடம்
வந்தாரை வாழ வைக்கும் நகராக விளங்கும் திருப்பூர் மாநகரில் வெளி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இப்படி அதிகமான மக்கள் வசித்து வரும் ஊராக திருப்பூர் மாநகரம் விளங்குகிறது.
இந்தநிலையில் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பிற மாவட்டங்களான ஈரோடு, கோவை போன்ற ஊருக்கு செல்லுவதற்காகவும், விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்வதற்காகவும் ரெயில் போக்குவரத்தை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை ரெயில் நிலையத்திற்கு முன் நிறுத்தி விட்டு ரெயிலில் செல்வதற்கு இருசக்கர வாகன கட்டண நிறுத்துமிடம் செயல்படுகிறது. இந்த இருசக்கர வாகன கட்டண நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு அதிகமானோர் செல்கின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
ஆனால் இந்த நிறுத்துமிடம் மேற்கூரை இல்லாமல் காணப்படுகிறது. மேற்கூரை இல்லாத காரணத்தினால் வெயில் அடிக்கும் போதும், மழை பெய்யும் போதும் வாகனங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மேலும் அதிக நாட்களுக்கு நிறுத்தப்படும் வாகனங்களின் என்ஜின் பழுதாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் பழுதாகி மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இது பெரும் செலவுக்கும் வழிவகுக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
குறிப்பாக இந்த ரெயில் நிலையத்திற்கு முன் மின்சார பேட்டரி வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. மேற்கூரை இல்லாத காரணத்தினால் வெயில் அடிக்கும் போது இந்த பேட்டரி வாகனங்கள் விபத்துள்ளாகி அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகத்தினர் இந்த இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை ஆய்வு செய்து மேற்கூரை அமைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.
-------------