கோ-ஆப்டெக்ஸ் பட்டு ரகங்கள் தேசிய அளவில் தரம் வாய்ந்தவை
கோ-ஆப்டெக்ஸ் பட்டு ரகங்கள் தேசிய அளவில் தரம் வாய்ந்தவை என்று சேலத்தில் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
கோ-ஆப்டெக்ஸ் பட்டு ரகங்கள் தேசிய அளவில் தரம் வாய்ந்தவை என்று சேலத்தில் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு அரசின் கைத்தறி ஆதரவு திட்டம் 2020-21-ன் கீழ் ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் சேலம் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நேற்று காலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை பெருக்குவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டது. பிறகு ஊழியர்களுக்கு பிரத்தியேக பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. கோ-ஆப்டெக்சில் விற்பனை செய்யப்படுகின்ற பட்டு ரகங்கள் தேசிய அளவில் தரம் வாய்ந்ததாக விளங்குகிறது. தரமான முறையில் ஜவுளிகள் தயாரிக்கப்பட்டதால் ரூ.20 கோடி லாபம் ஈட்டப்பட்டது.
சிரிப்பதில்லை
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள், நிதித்துறையை எந்த அளவிற்கு வைத்து சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் முதல்-அமைச்சர் செய்வது சாதாரண விஷயம் அல்ல. முதல்-அமைச்சர் எங்களை பார்த்து சிரிப்பதில்லை. மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே இருக்கிறார். அந்த அளவிற்கு முன்னேற்றத்திற்காக பாடுபட்டுவருகிறார்.
154 இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் மையங்கள் உள்ளன. இதில் 105 கடைகள் தமிழ்நாட்டிலும், 49 கடைகள் வெளிமாநிலங்களிலும் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 45 கடைகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மண்டலத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டுமாளிகை விற்பனை நிலையத்தில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
தள்ளுபடி
கடந்த ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்கப்பட்டது. கோ-ஆப்டெக்சில் விலை கூடுதலாக இருப்பதாக கூறுவது தவறு. கோ-ஆப்டெக்சில் வாங்கும் தரம் வேறு, மற்ற இடங்களில் தரம் வேறு.
இதில் தரத்திற்கு உத்தரவாத அட்டை (கியாரண்டி கார்டு) கொடுக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது பட்டுக்கு 30 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே குஜராத்திற்கு பிறகு தமிழ்நாடு இரண்டாவது இடம் என்று கூறிய நிலையில், தற்போது குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு முன்னேற்றத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துணை இயக்குனர் (கைத்தறி) பி.மாதேஸ்வரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், மண்டல மேலாளர் (கோ-ஆப்டெக்ஸ்) காங்கேயவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.