தேசிய விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல்
அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் நிகழ்ச்சியாக, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுடன், உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார்.
சென்னை,
'ஏகலைவா' மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்க இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து 177 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர். அந்த மாணவர்களுடன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. அமைச்சராக பதவியேற்றதும், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது ஆகும்.
மாணவர்களை சந்தித்த ஆர்வத்தில், மேடைக்கு கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லாமல், நேரடியாக மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். அப்போது மாணவ-மாணவிகளிடம் சகஜமாக பேசினார். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
சில மாணவிகள் 'செல்பி' எடுக்க முயற்சித்தனர். உடனே அவர் மாணவிகளிடம் இருந்து செல்போனை வாங்கி, அவரே 'செல்பி' எடுத்து கொடுத்தார். மேலும் சில மாணவிகள், 'உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?' என்று அவரிடம் கேட்டனர். அதற்கு, 'கிரிக்கெட், இறகுப்பந்து விளையாட்டு' என்று உதயநிதி ஸ்டாலின் பதில் கூறினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, 'விளையாட்டு மாணவர் தனுஷ்பேடி, 'எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. அதை ஏற்படுத்தி கொடுங்கள்' என்றும், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரசாந்த், 'பள்ளியில் கூடுதல் கட்டிடங்களை கட்டித்தாருங்கள்' என்றும், நாமக்கல்லை சேர்ந்த மாணவர் ஒருவர் 'குத்துச்சண்டை மேடை அமைந்து கொடுங்கள்' என்றும் கோரிக்கைகளை வைத்தனர்.
அதனை, 'முதல்-அமைச்சர், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்து கண்டிப்பாக செய்து தருகிறேன்' என்று கூறினார்.
வெற்றி, தோல்வி முக்கியமல்ல
தொடர்ச்சியாக மாணவ-மாணவிகள் மத்தியில் அவர் பேசுகையில், 'வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல; அதில் முயற்சி செய்வதுதான் முக்கியம். அதுவே மிகப்பெரிய வெற்றி' என்றார். அதனையடுத்து, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு, முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார்.
பின்னர், ஜம்மு காஷ்மீரில் நடந்த 33-வது சீனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பெற்ற தமிழக மாணவிகள், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் வளர் அகிலன், செயலாளர் ஞானவேல் ஆகியோருடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
'மினி ஸ்டேடியம்'
கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, 234 தொகுதிகளிலும் 'மினி ஸ்டேடியம்' அமைப்பது, என்னுடைய முதல் இலக்காக இருக்கும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக என்னுடைய பணிகளில் கவனம் செலுத்துவேன். முதல்-அமைச்சர் தங்க கோப்பை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிலம்பாட்டம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம் பெறும். இந்த போட்டி ஜனவரி மாதம் முதல் தொடங்கும். 'பீச் ஒலிம்பிக்ஸ்' போட்டியை தமிழகத்தில் நடத்த முயற்சி செய்து வருகிறோம்.
அதேபோல், ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியையும் நடத்த முயற்சிகள் நடக்கிறது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் நாங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி கேள்விக்கு, சிரித்தபடி பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்
தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்ற மாணவி, 'உடற்கல்வி பாடவேளைகளில், விளையாட்டு தொடர்பாக கற்றுத்தராமல், வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் வந்து பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே உடற்கல்வி பாடவேளைகளில், விளையாட அனுமதிக்க வேண்டும்...' என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சிரித்தபடி... விளையாடிக் கொண்டே இருக்கணும் என்று நினைத்துவிட்டீர்களா?' என்று கூறியதோடு, கண்டிப்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்று, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்படும்' என்றார்.