"ஒரு செங்கலை வைத்து கோட்டையை தகர்த்தவர் உதயநிதி" - ஆர்.எஸ்.பாரதி
உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,
தலைமுறை தலைமுறையாக, வாரிசு வாரிசாக இந்த கட்சியில் இருப்பவர்கள் நாங்கள். எவர் எதைப்பற்றி பேசினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. தலைமுறை தலைமுறையாக வாழ்வோம். நீங்கள் அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. கலைத்துறையில் எப்படி வாரிசுகள் வருகிறார்களோ அதேபோல் அரசியலில் வாரிசுகள் வருவது தவறில்லை.
அமைச்சராக வரவிருக்கின்ற உதயநிதி அரசியலில் கால்வைத்த நாள் முதல் வெற்றிகளையே தேடிக்கொடுத்து வருபவர். தமிழ்நாடு முழுவதும் ஒரே செங்கலை வைத்து கோட்டையை தகர்த்து காட்டிய பெருமை உதயநிதி ஸ்டாலினுக்கு உண்டு' என்றார்.