உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நினைவுத்தூண்
உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நூற்றாண்டு விழா நினைவாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.48 கோடியே 87 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் மத்திய பஸ் நிலையம் அருகே கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், கழுத்தறுத்தான்பள்ளம் (ஓடை) பகுதிகளில் தடுப்பு சுவர் கட்டுதல், சர்தார் வீதியில் உள்ள நகராட்சி அண்ணா பூங்காவை மேம்படுத்துதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் நூற்றாண்டு விழா நினைவாக நகராட்சி அலுவலகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நினைவுத்தூண் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்தில், அலுவலகத்தின் முன்புறம் இந்தியாவின் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இனி இந்த இடத்தை அழகுபடுத்தும் இறுதிகட்ட பணிகள் நடைபெற உள்ளது.