குடிநீர், இருக்கை வசதியின்றி பரிதவிக்கும் பயணிகள்


குடிநீர், இருக்கை வசதியின்றி பரிதவிக்கும் பயணிகள்
x
திருப்பூர்


உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. மேலும், போதுமான இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதியில்லாத காரணத்தால் இங்கு வரும் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் ேகாரிக்கை வைக்கின்றனர்.

தரையில் அமரும் பயணிகள்

உடுமலையில் உள்ள மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த அளவிலான இருக்கை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அமருவதற்கு இடமின்றி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல் சில கடைகாரர்கள் பயணிகளுக்கு இடையூறாக பாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர்.

குடிநீரின்றி தவிப்பு

இதேபோல் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி முற்றிலும் இல்லை. பஸ் நிலையத்தில் ஆங்காங்கே 4 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயனடைந்து வந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களாக இந்த எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வசதியின்றி பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தொலை தூர பயணத்தில் வரும் பயணிகள் மற்றும் நடத்துனர், ஓட்டுனர்கள் தவித்த வாயுடன் குடிநீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதேபோல் பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதியும் போதுமானதாக இல்லை. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது.

தாறுமாறாக நிற்கும் பஸ்கள்

இதேபோல் பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ரேக்குகளில் பலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான நேரங்களில் பஸ்கள் உரிய இடத்தில் நிறுத்தாமல் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நடுவழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி, இறக்கப்படுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேபோல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் அடிக்கடி பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கு பயணிகள் அணுகும் வகையில் முழு நேரமும் போலீசார் பணியில் இருந்தால் பயணிகளுக்கு உதவியாய் இருப்பதுடன், குற்றவாளிகள் தப்பிக்காமலும் தடுக்க முடியும்.

இதே போன்று பஸ் நிலையத்தின் நடுவே கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இரும்பு தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த குழியை மூட வேண்டும்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

துரைசாமி(விவசாயி):- கடந்த காலங்களில் இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது இவை செயல்படாமல் இருப்பதால் கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டியுள்ளது. இது எங்களைப்போன்ற ஏழைகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இங்குள்ள சில எந்திரங்களில் குழாய்களே இல்லை. அடிக்கடி குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. எனவே பஸ் நிலையத்தில் தட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செந்தில்ராஜ்கபூர்(கல்லூரி பேராசிரியர்):-

இங்கு பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேம்படுத்த வேண்டும். கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்ப தால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. நகரின் முக்கியமான பஸ் நிலையத்தில் இருக்கை வசதி மிகவும் குறைவாக இருப்பதால் பெண்கள் குழந்தைகளுடன் தரையில் அமர வேண்டிய அவல நிலை உள்ளது. உடுமலையில் இருந்து ஆனைமலைக்கு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இந்த வழித்தடத்திற்கு சில பஸ்கள் வருவதில்லை. இதை அதிகாரிகளிடம் முறையிட்டாலும் தொடர்ந்து இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எனவே பஸ் நிலையத்தில் குடிநீர், கூடுதல் இருக்கைகள், கழிவறை என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story