உடுமலை தி.மு.க. நகராட்சி தலைவரை கொல்ல திட்டமா?
உடுமலை தி.மு.க. நகராட்சி தலைவரை கொல்ல திட்டமா?
போடிப்பட்டி
உடுமலை போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த வாலிபர் கூலிப்படையை ஏவி உடுமலை தி.மு.க. நகராட்சித் தலைவரை கொல்ல சதி நடப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்தியுடன் நுழைந்த வாலிபர்
உடுமலை போலீஸ் நிலையத்துக்குள் நேற்று மாலை கையில் பளபளக்கும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரிடமிருந்த கத்தியை பறித்த அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவருடைய பெயர் ஷேக் தாவூத் (வயது 21) என்றும், சொந்த ஊர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி என்றும், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோருடன் உடுமலைக்கு குடிவந்து விட்டதாக தெரியவந்தது. மேலும் அவர் உடுமலை தி.மு.க. நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பொள்ளாச்சி சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த மத்தீனை தொடர்பு கொண்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு எச்சரித்துள்ளனர். அத்துடன் அந்தியூர் பகுதியில் வந்து கொண்டிருந்த மத்தீனை போலீசார் சென்று பாதுகாப்புடன் உடுமலை அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தி.மு.க.வினர் உடுமலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-
சதி திட்டம் தீட்டியது யார்?
நகராட்சி தலைவர் மத்தீனை கொலை செய்யும் நோக்கத்தில் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஷேக் தாவூத்தை சந்தித்து நகராட்சி தலைவர் மத்தீன் புகைப்படத்தைக் காட்டி அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஷேக் தாவூத் மறுப்பு தெரிவித்து கத்தியுடன் போலீசில் சரணடைந்துள்ளார். எனவே நகராட்சி தலைவர் மத்தீனை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர்கள் யார்? அவர்களை ஏவியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஷேக் தாவூதுக்கு திருமணம் ஆகி மனைவி இவரைப் பிரிந்து சென்றுள்ளார்.இவர்களுக்குப் பிறந்த குழந்தை இறந்து விட்டதால் பாதிக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார்.மேலும் உடுமலையிலேயே டீ மாஸ்டர், பூ வியாபாரம் என பல வேலைகளை செய்துள்ளார்.தற்போது போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.அவர் கூறிய தகவல்கள் உண்மையா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கூலிப்படையை ஏவி உடுமலை நகராட்சித் தலைவரை கொல்ல சதி நடந்துள்ளதாக தகவல் பரவியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.