தூர்வாரப்பட்ட இடங்களில் அப்புறப்படுத்தப்படாத மண்,செடிகள்
உடுமலை கழுத்தறுத்தான் பள்ளத்தில் தூர்வாரப்பட்ட இடங்களில் உள்ள மண்குவியல்கள் அப்புறப்படுத்தப்படாத நிலையில் செடிகள் வளர்ந்து புதராக உள்ளது.
கழுத்தறுத்தான் பள்ளம்
உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 103 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நூற்றாண்டு விழா நினைவாக நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் ரூ.48 கோடியே 87 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள கழுத்தறுத்தான் பள்ளத்தை (ஓடை) தூர்வாரி இரண்டு புறமும் தடுப்புசுவர் கட்டுவதற்காக ரூ.15 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இதன் மூலம் இந்த ஓடையை தூர்வாரி தடுப்புசுவர் கட்டும் பணிகள்ஆங்காங்கு இடைவெளி விட்டு விட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
மண்மேடுகள், செடிகள்
இதில் ஓடை தூர்வாரி தடுப்புசுவர் கட்டப்பட்ட சில இடங்களில் நடுவில் உள்ள மண்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பளிச்சென்று காட்சியளிக்கிறது. அதேசமயம் சில இடங்களில் அவை அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. அத்துடன் அந்த மண் மேடுகளில் செடிகள் உயரமாக வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இதுபோன்ற நிலை திருப்பூர் சாலையில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு அருகிலும் உள்ளது. திருப்பூர் சாலையின் கிழக்கு புறம் ஓடை பளிச்சென்று காட்சியளிக்கும் நிலையில், சாலையின் மேற்கு புறம் ஓடையில் உள்ள மண்மேடுகளில் செடிகள் வளர்ந்து புதர்போன்று உள்ளது.
மழை அதிகம் பெய்தால் இதுபோன்று மண்மேடுகள் அப்புறப்படுத்தப்படாத இடங்களில், ஓடையில் தண்ணீர் செல்வது தடைபடும். அதனால் பணிகள் முடிவடைந்த இடங்களில் ஓடையின் நடுவில் உள்ள மண்மேடுகள் மற்றும் புதர்போன்று உள்ள செடிகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஓடையை முழுவதும் தூர்வாரி தடுப்புசுவர் கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.