முதலையை பிடிப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
கடத்தூர் ராஜவாய்க்கால் பகுதியில் உலா வரும் முதலையைப் பிடிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வேதனை அடைந்துள்ள பொதுமக்கள், உயிழப்புகள் ஏற்பட்டால் தான் ஓடி வருவார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
புதர்கள்
உடுமலை அமராவதி அணையிலிருந்து தொடங்கும் அமராவதி ஆற்றில் கல்லாபுரம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது பாறையில் படுத்து ஓய்வெடுக்கும் முதலையைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் ராஜவாய்க்கால் பகுதியில் தண்ணீரில் நீந்தி வந்த முதலை ஒன்று புதருக்குள் செல்வதை விவசாயி ஒருவர் பார்த்துள்ளார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
முதலை நடமாட்டம் குறித்து வனத்துறைக்குத்தகவல் தெரிவித்ததும் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தினால் தான் முதலையைப் பிடிக்க முடியும் என்று அங்கிருந்தே பதில் கூறியுள்ளனர். உடனடியாக பொதுப்பணித்துறையினர் அனுமதியுடன் பாசன நீர் நிறுத்தப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் கடத்தூர் வந்த வனத்துறையினர் வாய்க்கால் கரையிலிருந்த புதர்களை அகற்றினால் தான் முதலையைப் பிடிக்க முடியும் என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
அலட்சியம்
இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு தெரிவித்தால் அவர்கள் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி புதரை அகற்ற முன்வரவில்லை. பாசன நீர்த்திருட்டை கண்காணிக்கவும், தடுக்கவும் இடையூறாக உள்ள புதர்களை அகற்றுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் பேரிடர் மேலாண்மையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வருவாய்த்துறையினர் இது தங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் என்பது போல ஒதுங்கிக் கொண்டனர். இதனால் முதலையைப் பிடிக்கும் பணிகள் எந்த முயற்சியும் செய்யாமல் தொடங்கிய இடத்திலேயே நின்றது. ஊராட்சி நிர்வாகம் ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தது. இதனையடுத்து வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை முதலையை பிடிப்பதற்கான சிறு முயற்சியைக் கூட வனத்துறையினர் மேற்கொள்ளவில்லை.புதரைச் சுத்தம் பண்ணி விட்டு சொல்லுங்கள் வருகிறோம் என்பது போல அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. புதருக்குள் முதலை மறைந்திருந்தால் சுத்தம் பண்ணும்போது வனத்துறை வரட்டும் என்று அங்கேயே காத்திருக்குமா? பல கிராமங்களில் உலா வரும் முதலைகள் இதுவரையில் மனிதர்களைத் தாக்கியதில்லை என்பதால் அனைத்துத்துறை அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை. உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்ட பிறகு கூட்டம் கூட்டமாக ஓடி வந்து எந்த பயனும் இல்லை. அமராவதி முதல் கடத்தூர் வரை பல இடங்களில் காணப்படும் முதலைகளை தொடர்ந்து கண்காணித்து உரிய முறையில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.